தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் - டெல்லி அரசு உத்தரவு
தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்க நீர்வாரிய அதிகாரிகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடுமையான வெப்ப சலனம் நிலவி வருவதாலும், அரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலும் தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும் கட்டுமான தளங்கள், வணிக நிறுவனங்களில் சட்ட விரோதமாக தண்ணீர் இணைப்பு எடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி அரசின் நீர்வளத்துறை மந்திரி அதிஷி, டெல்லியில் தண்ணீர் வீணாக செலவிடப்படுவதை தடுக்கும் வகையில் குழுக்களை அமைத்து கண்காணிக்க நீர்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துவதை கண்காணிக்க டெல்லி முழுவதும் 200 குழுக்கள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக தண்ணீரை வணிக ரீதியாகவோ, கட்டுமானங்களுக்காகவோ, வாகனங்களை சுத்தம் செய்வதற்காகவோ பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கவும் நீர்வாரிய அதிகாரிகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.