ரூ.15 ஆயிரம் கோடியில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம்; வருகிற 20-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 20-ந் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-06-07 21:36 GMT

பெங்களூரு: ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 20-ந் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ராஜகால்வாய்கள்

பெங்களூருவில் அனைத்து வசதிகளும் சர்வதேச தரத்தில் ஏற்படுத்தப்படும். இந்த நோக்கத்தில் பெங்களூருவை வளர்க்க திறமையான மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் பணியாற்றி வருகிறார்கள். நவீன வசதிகளுடன் சிறந்த பெங்களூரு நகரம் உருவாக்கப்படும். புதிய இந்தியாவை உருவாக்க புதிய கர்நாடகத்தை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

பெங்களூரு சர்வதேச நகரமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1,500 கோடியில் ராஜகால்வாய்கள் மேம்படுத்தப்படுகின்றன. இது மட்டுமின்றி ரூ.15 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 20-ந் தேதி பெங்களூருவில் அடிக்கல் நாட்டுகிறார். இது பெங்களூரு மக்களின் நீண்ட நாள் கனவாகும்.

புறநகர் ரெயில் திட்டம்

இந்த கனவு விரைவில் நனவாக உள்ளது. நகரில் முக்கியமான அதிக வாகன நெரிசல் உள்ள 12 சாலைகள் சிக்னல் இல்லாத சாலைகளாக மாற்றப்படுகின்றன. இப்படி நாங்கள் பல்வேறு திட்ட பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

பிரதமர் மோடி பையப்பனஹள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பயணிகள் ரெயில் முனையத்தையும் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு 10-க்கும் மேற்பட்ட திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான விழாவை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்