கொள்ளை முயற்சி, துப்பாக்கி சூடு... விடாமல் 30 கி.மீ. ஓட்டி பயணிகளை பாதுகாத்த பஸ் ஓட்டுநர்

துப்பாக்கி சூட்டுக்கு பின், காயத்துடன் 30 கி.மீ. தொலைவுக்கு காவல் நிலையம் நோக்கி மினிபஸ்சை ஓட்டுநர் கோம்தேவ் ஓட்டி சென்றார்.

Update: 2024-03-13 03:50 GMT

புதுடெல்லி,

மராட்டியத்தின் புல்தானா மாவட்டத்தின் செகாவன் நகரில் இருந்து நாக்பூரை நோக்கி மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த மினிபஸ்சை ஓட்டுநர் கோம்தேவ் கவாடே என்பவர் ஓட்டி சென்றார். அதில், ஒரே குடும்பத்தின் 17 உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து, சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

வழியில், அமராவதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் அவர்களின் பயணம் தொடர்ந்தது. அப்போது, வழியில் ஆடம்பர ரக கார் ஒன்று மினிபஸ்சை பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 6-ல் சென்றபோது, நந்தகாவன் பேட்டை பகுதியருகே, அந்த கார் முன்னே செல்ல கோம்தேவ் வழி விட்டுள்ளார். 2 முறை இதுபோன்று வழி கிடைத்தும் அவர்கள் மினிபஸ்சை முந்தி செல்லவில்லை.

ஒரு கட்டத்தில் காரில் பின்தொடர்ந்த நபர்கள் திடீரென பஸ்சை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்கள் மினிபஸ்சில் இருந்தவர்களிடம், திட்டமிட்டு கொள்ளையடிக்க பின்தொடர்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. முதல் முறை குண்டு படாமல் கோம்தேவ் தப்பி விட்டார். தொடர்ந்து 4 முறை இதுபோன்று துப்பாக்கி சூடு நடந்தது.

இதில் 3 முறை அவர் தப்பி விட்டார். ஆனால், ஒரு குண்டு அவருடைய கையில் பாய்ந்துள்ளது. எனினும், காயத்துடன் விடாமல் 30 கி.மீ. தொலைவுக்கு காவல் நிலையம் நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார். தியோசா பகுதியில் காவல் நிலையத்தில் பஸ்சை நிறுத்தியுள்ளார்.

போலீசார் நிலைமையை உணர்ந்து உடனடியாக உதவிக்கு ஓடி வந்தனர். இதனால், பயணிகள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மினிபஸ்சில் இருந்த பயணிகள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திவ்சா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். கோம்தேவை போலீசார் பாராட்டினர்.

சம்பவம் பற்றி கோம்தேவ் கூறும்போது, சொகுசு காரின் பதிவெண் சரியாக நினைவில்லை. ஆனால், அந்த காரில் உத்தர பிரதேச பதிவெண் இருந்தது என கூறினார். காரில் இருந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த கும்பல் நாசிக் நகரில் இருந்து கார் ஒன்றை சில நாட்களுக்கு முன் திருடி சென்றுள்ளது. இதுபற்றி எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவாகி உள்ளது. நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளிகளை தனிப்படைகளை அமைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்