மே மாத சில்லறை பணவீக்கம் 7.04 சதவீதமாக குறைவு!
ஏப்ரல் மாதம் 7.79 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 7.04 சதவீதம் ஆக குறைந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் சில்லறை பணவீக்கம், கடந்த மே மாதத்தில் 7.04 சதவீதமாக குறைந்துள்ளது.
மே மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைந்ததன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 7.79 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் 7.04 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.
ஏப்ரல் மாதம் 8.31 சதவீதம் ஆக இருந்த மொத்த உணவு பணவீக்கம், மே மாதம் 7.97 சதவீதம் ஆகவும், கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 5.01 சதவீதம் ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தொடர்ந்து 5வது மாதமாக ரிசர்வ் வங்கியின் பணவீக்க அளவீடுகளான 2-6 சதவீத அளவீட்டை சில்லறை பணவீக்கம் தாண்டியிருக்கிறது.
டீசல் இந்தியாவின் முக்கிய போக்குவரத்து எரிபொருளாகும், இது நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருட்களின் போக்குவரத்து செலவையும் நேரடியாக பாதிக்கிறது. எனவே டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரிகளை குறைத்ததன் மூலம் அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியது.
மேலும், நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் வகையில் சோயாபீன் மற்றும் சூரியகாந்தி போன்ற சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியையும் அரசாங்கம் மே மாதம் தளர்த்தியது.நுகர்வோர் எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம், ஏப்ரல் மாதத்தின் 10.80 சதவீதத்திலிருந்து மே மாதம் 9.54 சதவீதமாக குறைந்துள்ளது.
இருப்பினும், மக்களின் முக்கிய நுகர்வுப் பொருளான காய்கறிகளின் விலையில் ஏறபட்ட பணவீக்கம், ஏப்ரலில் நிலவிய 15.41 சதவீதத்தில் இருந்து மே மாதம் 18.26 சதவீதமாக உயர்ந்துள்ளது. பழங்களின் விலை உயர்வு விகிதம், 4.99 சதவீதத்தில் இருந்து 2.33 சதவீதமாக குறைந்துள்ளது.
சமையல் எண்ணெய் விலை உயர்வு விகிதம், 17.28 சதவீதத்தில் இருந்து 13.26 சதவீதமாக குறைந்துள்ளது. தானியங்கள் விலை உயர்வு விகிதம், 5.96 சதவீதத்தில் இருந்து 5.33 சதவீதமாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த உணவுப்பொருட்கள் விலை உயர்வு விகிதம், 8.31 சதவீதத்தில் இருந்து 7.97 சதவீதமாக குறைந்துள்ளது.எரிபொருள் விலை உயர்வு விகிதம், 10.8 சதவீதத்தில் இருந்து 9.54 சதவீதமாக குறைந்துள்ளது.
2023ஆம் நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளுக்கு, இந்தியாவின் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்சபட்ச பணவீக்க அளவான 6 சதவீதத்திற்கு அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை அதன் முந்தைய மதிப்பீட்டான 5.7 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான முதல் 3 காலாண்டுகளுக்கு இந்தியாவின் பணவீக்கம் ஜூன் காலாண்டு - 7.5%, செப்டம்பர் காலாண்டு - 7.4%, டிசம்பர் காலாண்டு - 6.2%, மார்ச் காலாண்டு - 5.8% என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள சில்லறை பணவீக்கத்தின் அளவு படி, கிராமப்புற சில்லறை பணவீக்கம் 7.01 சதவீதமாக உள்ளது. இது கடந்த மாதம் 8.38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.