மத மாற்றம், ஊடுருவல் ஆகியவை மக்கள் தொகை ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது- ஆர்.எஸ்.எஸ்
மத அடிப்படையிலான மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு பல நாடுகளின் பிளவுக்கு வழிவகுத்ததாக ஹோசபாலே பேசினார்.
பிரயாக்ராஜ்,
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய செயற்குழுவின் நான்கு நாள் கூட்டம் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, மத மாற்றம் மற்றும் எல்லைப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்தல் ஆகியவை "மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை" ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மத அடிப்படையிலான மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு பல நாடுகளின் பிளவுக்கு வழிவகுத்ததாக தெரிவித்த ஹோசபாலே, மத மாற்றத்தைத் தடுப்பதில் தற்போதுள்ள சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
கடந்த 40-50 ஆண்டுகளில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக, ஒரு குடும்பத்தின் சராசரி அளவு 3.4ல் இருந்து 1.9 உறுப்பினர்களாக குறைந்துள்ளதாக ஹோசபாலே கூறினார். இதன் காரணமாக, எதிர்காலத்தில் இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் முதியோர்களின் எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளது. அது கவலைக்குரிய விஷயம் என்று தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்தார்.