ரூ.2.68 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.2.68 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-07-26 15:53 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.2.68 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போலீஸ் கமிஷனர் பேட்டி

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையம் அருகே உள்ள நியூ டிம்பர் லே-அவுட்டில் செம்மரக்கட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக பேடராயனபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் நாயக்கிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சங்கர் நாயக் தலைமையில் பேடராயனபுரா போலீசார் சென்றனர். அப்போது சந்தேகம்படும்படியாக சுற்றிய ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் வினோத் என்பதும், அவர் செம்மரக்கட்டைகளை விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பின்னர் வினோத் கொடுத்த தகவலின்பேரில் நைஸ் ரோடு சந்திப்பில் செம்மரக்கட்டைகளை விற்க முயன்ற வினோத்தின் கூட்டாளிகளான லட்சுமய்யா, சஞ்சய், ராஜூ, கிருஷ்ணா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 113 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.2.68 கோடி

கைதான 5 பேரும் செம்மரக்கட்டைகளை வனப்பகுதிகளில் இருந்து வெட்டி கடத்தி வந்து ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவர்கள் 5 பேரும் கொடுத்த தகவலின்பேரில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,580 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக 3 இடங்களில் இருந்து 1,710 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு ரூ.2 கோடியே 68 லட்சம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்