பா.ஜ.க.வில் இணைந்த ஆர்.சி.பி. சிங்; நிதிஷ் குமாரின் வலது கரம் போல் திகழ்ந்தவர்
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நாற்காலிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்பவர் என பா.ஜ.க.வில் இணைந்த ஆர்.சி.பி. சிங் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தவர் ராம்சந்திர பிரசாத் சிங் என்ற ஆர்.சி.பி. சிங். மத்திய உருக்குத்துறை மந்திரியாக இருந்த ஆர்.சி.பி. சிங் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் வகித்து உள்ளார்.
கட்சி தலைவர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகியதும், அந்த பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 ஆண்டுகள் தலைவர் பதவியில் நீடிப்பார் என கூறப்பட்ட நிலையில், கடந்த 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் பதிவு செய்துள்ள அசையா சொத்துகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி கட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை கடந்த ஆண்டு வெளியிட்டார். ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும் கூறினார். சட்டப்பூர்வ முறையில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நிதி நிலை திறன் அடிப்படையில் சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளன என அவர் கூறி அதற்கான சான்றுகளையும் வெளியிட்டார்.
எனினும், மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டேவை வைத்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது போன்று, பீகாரில் ஆர்.சி.பி. சிங்கை ஷிண்டேவாக ஆக்க பா.ஜ.க. விரும்பியது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை நிதிஷ் குமார் கூறினார்.
அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த ஆர்.சி.பி. சிங், தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த முடிவை கைவிட்டு, பா.ஜ.க.வின் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்து உள்ளார்.
அதன்பின் பின் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பற்றி பேசிய அவர், சி என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகள் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். குற்றம் மற்றும் ஊழல் என ஆங்கிலத்தில் சி என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளை குறிப்பிட்டதுடன், நாற்காலி (சேர்) என பொருள்படும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தும் சி ஆகும். அதனால், தற்போது எல்லாம் அவர் நாற்காலிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்கிறார் என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.