கேரளாவின் ரெயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது; பினராயி விஜயனியிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

கர்நாடக வனப்பகுதியில் நடைபெறும், கேரளாவின் ரெயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-09-18 20:14 GMT

பெங்களூரு:

ரெயில்பாதை திட்டம்

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பினராயி விஜயனுக்கு பசவராஜ் பொம்மை மைசூரு தலைப்பாகை மற்றும் சந்தன மாலை அணிவித்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் கேரளா-கா்நாடகம் இடையே ரெயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் கேரளாவின் ரெயில்வே திட்டங்களுக்கு அனுமதி வழங்கினால் வனப்பகுதி மற்றும் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பதால், அவற்றுக்கு அனுமதி வழங்க முடியாது என்று பினராயி விஜயனிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பலன் கிடையாது

சமீபத்தில் கேரளாவில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி இன்று(நேற்று) என்னை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சந்தித்து பேசினார். அப்போது, கோழிக்கோடு-காணியூர் ரெயில்வே பாதை அமைக்கும் திட்டம் உள்பட பல்வேறு ரெயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கேரள முதல்-மந்திரி கேட்டார்.

கோழிக்கோடு-காணியூர் ரெயில் பாதை திட்டம் கேரளாவில் 40 கிலோ மீட்டரும், கர்நாடக வனப்பகுதியில் 31 கிலோ மீட்டரும் அமைகிறது. இந்த திட்டத்தால் கர்நாடகத்திற்கு பெரிய பலன் கிடையாது. இந்த திட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைகிறது. அதனால் இந்த திட்டத்திற்கு கர்நாடகத்தால் அனுமதி வழங்க இயலாது என்பதை தெரிவித்தோம்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

அதே போல் தலச்சேரி-மைசூரு இடையே ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கும் அனுமதி வழங்குமாறு பினராயி விஜயன் கோரினார். இந்த திட்டம் பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்காவில் அமைகிறது. இந்த திட்டத்தால் அங்குள்ள வன உயிரினங்கள் மற்றும் வன சொத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்கும் கர்நாடகம் ஒப்புதல் வழங்காது என்று கூறினேன்.

அப்போது பினராயி விஜயன், சுரங்கத்தில் ரெயில் பாதை அமைத்து திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கூறினார். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பணிகளின்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் அந்த திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி வழங்க இயலாது என்று கூறி கர்நாடகத்தின் நிலைப்பாட்டை எடுத்து கூறினேன்.

பஸ்கள் போக்குவரத்து

மேலும் கேரளா-கர்நாடகம் இடையே பந்திப்பூர் வனப்பகுதியில் இரவு நேரத்தில் 2 பஸ்களின் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிக்குமாறு கேரள முதல்-மந்திரி கோரிக்கை விடுத்தார். அதையும் கர்நாடகம் நிராகரித்துவிட்டது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்