பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வெறுப்பும், பிரிவினைவாதமும் அதிகரிப்பு - ராகுல்காந்தி விமர்சனம்
இந்தியாவில் பணவீக்கம் குறித்த அச்சம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என ஆர்ப்பாட்டத்தில் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி,
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் ராம் லீலா மைதானத்தில் குவிந்து வருகிறார்கள். டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். இதனைத்தொடர் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வெறுப்பும், பிரிவினைவாதமும் அதிகரித்துள்ளன. பிரதமர் மோடி அரசின் கொள்கைகள் இரண்டு பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பலனளித்து வருகின்றன. அவர் தனது நண்பர்களுக்கு சம்பாதித்து தருவதற்காக ஓய்வில்லாமல் உழைக்கிறார். மக்களோ விலைவாசி உயர்வால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். பயம் மற்றும் வெறுப்பு மூலம் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். இந்த பயத்தால் யாருக்கு லாபம்? நரேந்திர மோடி அரசால் ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஏதாவது பலன் பெறுகிறார்களா? இரண்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே பலன் பெறுகிறார்கள்.
இரு தொழிலதிபர்களுக்கும் அனைத்து சலுகைகளையும் பாஜக அரசு கொடுத்து வருகிறது. மூன்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டது விவசாயிகளின் நலனுக்காக இல்லை. இரு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தான் கொண்டு வரப்பட்டது மட்டுமே. ஆனால் விவசாயிகள் சாலையில் வந்து தங்கள் சக்தி என்ன என்பதை பிரதமர் மோடிக்கு காட்டிவிட்டனர்.
நாட்டின் முதுகெலும்பான சிறு, குறு நிறுவனங்களுக்கு பிரதமர் ஜிஎஸ்டி மூலம் மூடுவிழா நடத்தி விட்டார். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இரு பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் வேலைவாய்ப்பையும் வழங்குவதில்லை. அதுமட்டுமல்லாமல், கங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு இப்போது போல் இருந்ததில்லை. பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னைகளுக்கு பிரதமர் மட்டுமே பொறுப்பு. பணவீக்கத்திற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். அதை ராஜா (பிரதமர்) கேட்டுத்தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.