சமூக ஊடக முகப்பு படங்களை மாற்றிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சமூக ஊடக முகப்பு படங்களை மாற்றி உள்ளனர்.;
புதுடெல்லி,
நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், 2-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையில் அனைவரும் தங்கள் சமூக ஊடக கணக்கு முகப்பு புகைப்படங்களில் தேசியக்கொடியை பதிவிட பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி அவரும், பா.ஜ.க. தலைவர்களும் தங்கள் சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை மாற்றி உள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை நேற்று மாற்றி உள்ளனர்.
இவர்கள், நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏந்தியிருக்கும் காட்சியை தங்கள் சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படமாக பதிவேற்றம் செய்துள்ளனர். இதையொட்டி ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " நமது மூவர்ணக்கொடி நமது நாட்டின் பெருமை. நமது மூவர்ணக்கொடி, ஒவ்வொரு இந்தியரின் இதயம்" என குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
இதற்கிடையே சமூக ஊடக கணக்கு முகப்பு படங்களில் தேசியக்கொடியை இடம்பெறச் செய்துள்ள மோடியின் அழைப்பு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "சமூக ஊடக கணக்கு பக்கங்களில் முகப்பு படமாக மூவர்ணக்கொடியை பதிவிடும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இதை தேசியக்கொடியை தங்கள் தலைமை அலுவலகத்தில் ஏற்றாத நாக்பூர் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பினர், ஏற்று செயல்படுத்துவார்களா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
மெகபூபா முகப்பு படம்
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயகக்கட்சி தலைவருமான மெகபூபா, தனது சமூக ஊடக கணக்கு முகப்பு படத்தை மாற்றி உள்ளார்.
அவர் தனது தந்தை முப்தி முகமது சையதுவும், பிரதமர் மோடியும் பேசிக்கொண்டிருக்கும் காட்சியையும், அவர்கள் முன்பாக தேசியக்கொடியும், காஷ்மீருக்கான தனிக்கொடியும் இடம் பெற்றிருக்கும் படத்தை பதிவேற்றி உள்ளார்.