பத்மநாபநகர் தொகுதியில் 4-வது வெற்றியை ருசிப்பாரா ஆர்.அசோக்

Update: 2023-04-19 18:45 GMT

பெங்களூருவில் உள்ள முக்கியமான தொகுதிகளில் ஒன்று பத்மநாபநகர் தொகுதி ஆகும். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஆர்.அசோக் இருந்து வருகிறார். மந்திரியான இவர், முன்னாள் துணை முதல்-மந்திரியும் ஆவார். பா.ஜனதாவில் முக்கியமான தலைவர்களுள் இவர் முக்கியமானவர் ஆவார்.

இந்த தொகுதி கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது ஆகும். இந்த தொகுதி உருவானது முதல், அதாவது 2008-ம் ஆண்டு முதல் இதுவரை 3 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த 3 முறையும் பா.ஜனதா சார்பில் ஆர்.அசோக் போட்டியிட்டு வெற்றிபெற்று உள்ளார். இந்த தொகுதி பெங்களூரு தெற்கு மண்டலத்தில் அமைந்துள்ளது. மேலும் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது ஆகும்.

இந்த தொகுதியில் பத்மநாபநகர், கணேஷ் மந்திர், எடியூர், கொசேஹூரேஹள்ளி, ஹரிசந்திரா, பனசங்கரி கோவில், குமாரசாமி லே-அவுட், சிக்ககாலசந்திரா ஆகிய 8 மாநகராட்சி வார்டுகள் அடங்கி உள்ளன. தற்போது மாநகராட்சி தேர்தல் நடைபெறாததால் கவுன்சிலர்கள் யாரும் இல்லை. இந்த தொகுதியில் மொத்தம்

2 லட்சத்து 74 ஆயிரத்து 277 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 594 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். 1 லட்சத்து 34 ஆயிரத்து 664 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர். 19 பேர் 3-ம் பாலின வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல் இருந்து வருவதாக மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். இதை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் இத்தொகுதியில் அசோக் எம்.எல்.ஏ.வுக்கான அலுவலகமும் இதுவரையில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவரை மக்கள் சந்திப்பது அரிதாக இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். அவர் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சேத்தன் கவுடாவை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய பிரசாத் பாபு என்பவரையும் ஆர்.அசோக் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார்.

2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்ட எம்.சீனிவாசுக்கு 3-வது இடமே கிடைத்தது. அந்த தேர்தலில் ஆர்.அசோக் 77 ஆயிரத்து 868 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் வி.கே.கோபால் 45 ஆயிரத்து 702 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்து இருந்தார். பத்மநாபநகர் தொகுதியில் ஆர்.அசோக் கோலாச்சி வருவதால் இந்த தொகுதியில் பிற கட்சியினர் போட்டியிட தயங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் இத்தொகுதியில் உள்ள வாக்காளர்களும், பொதுமக்களும் ஆர்.அசோக் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

இத்தொகுதியில் பாதாள சாக்கடை பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை உள்பட ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றை களைய ஆர்.அசோக் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. இந்த அதிப்திகளை சரிகட்டி மீண்டும் ஆர்.அசோக் 4-வது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுவாரா என்பதை வருகிற 13-ந் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது இந்த தொகுதியில் ஆர்.அசோக்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வி.ரகுநாத் நாயுடு என்பவரும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஜய் கவுடா என்பவரும் போட்டியிடுகிறார்கள். இதில் ஆர்.அசோக் கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாரையும் எதிர்த்து போட்டியிடுவதால் அவரை பத்மநாபநகர் தொகுதியிலேயே முடக்க டி.கே.சிவக்குமாரின் தம்பி டி.கே.சுரேசை களம் நிறுத்த காங்கிரஸ் திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்

பத்மநாபநகர் தொகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த 2 சட்டசபை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

ஆண்டு வெற்றி தோல்வி

2008 ஆர்.அசோக்(பா.ஜனதா) -61,561 பிரசாத் பாபு(காங்.) -30,285

2013 ஆர்.அசோக்(பா.ஜனதா) -53,680 சேத்தன்கவுடா(காங்.) -33,557

2018 ஆர்.அசோக்(பா.ஜனதா) -77,868 வி.கே.கோபால்(ஜனதா தளம்-எஸ்) -45,702

Tags:    

மேலும் செய்திகள்