"ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பேன்" : பஞ்சாப் முதல்-மந்திரிக்கு கவர்னர் எச்சரிக்கை

ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என பஞ்சாப் முதல்-மந்திரிக்கு அம்மாநில கவர்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-08-25 20:31 GMT

சண்டிகார்,

எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் முதல்-மந்திரிகளுக்கும், கவர்னர்களுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

அதே நிலைதான் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கும், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையில் நீடிக்கிறது.

இந்த நிலையில், மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முதல்-மந்திரிக்கு தான் எழுதிய கடிதங்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று கவர்னர் பன்வாரிலால் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் போதைப்பொருட்களின் தாராள புழக்கம் தொடர்பாக தான் கடைசியாக எழுதிய கடிதத்துக்கும் முதல்-மந்திரி பதில் அளிக்கவில்லை. எனவே, தனது கடிதங்களுக்கு பதில் அளிக்காவிட்டால், 356 சட்டப் பிரிவின்படி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பேன்.

மேலும் தனது சட்டப்பூர்வ அதிகாரங்களை தடுக்கும் வகையில் செயல்படுவதால், இந்திய தண்டனைச் சட்டம் 124-வது பிரிவின்படி குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்குவது பற்றியும் முடிவெடுப்பேன் என்று முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம், ஊடகத்தினருக்கு நேற்று வெளியிடப்பட்டது.

இந்தக் கடிதத்தால், பஞ்சாப் முதல்-மந்திரி, கவர்னருக்கு இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அந்த மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்