கவர்னரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் - பஞ்சாப் முதல்-மந்திரி பதிலடி
கவர்னரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பதில் அளித்துள்ளார்.;
தனது கடிதங்களுக்கு முதல்-மந்திரி பகவந்த் மான் பதில் அளிக்காவிட்டால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என்று பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்-மந்திரி பகவந்த் மான் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'கவர்னர் எனக்கு எழுதிய 16 கடிதங்களில் 9 கடிதங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடிதங்கள் விவரங்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்காக, ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என்று பஞ்சாப் மக்களை கவர்னர் எப்படி மிரட்டலாம்?
தேர்வு செய்யப்பட்ட கவர்னருக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மிரட்ட எந்த தார்மீக உரிமையும் இல்லை. கவர்னரின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம். மத்திய அரசின் பொம்மைகளாக செயல்படும் கவர்னர்கள், பா.ஜ.க. அல்லாத அரசுகள் ஆளும் டெல்லி, மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள். அதேநேரம், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்த மாநில கவர்னர்கள் அமைதி காப்பது ஏன் என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.'
இவ்வாறு அவர் கூறினார்.