புனேயில் டாக்டருக்கும் மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு... கர்ப்பிணிகளின் உடல்நிலையை கண்காணிக்க உத்தரவு

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுகிறது.;

Update:2024-06-27 16:10 IST

புனே:

மராட்டிய மாநிலம், புனேயின் எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறியுடன் உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில், அவரது மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் ஜிகா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுபற்றி மாநகராட்சி சுகாதார அதிகாரி கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட டாக்டருக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி ஆய்வுக்காக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவு கடந்த 21-ம் தேதி வெளியானது. இதில், அவர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி ஆனது.

அதன்பின் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் ரத்த மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில், அவரது 15 வயது மகளுக்கு பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை கண்காணிக்கத் தொடங்கியது.

இப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வேறு யாருக்கும் ஜிகா வைரஸ் அறிகுறிகள் காணப்படவில்லை. எனினும், கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் மற்றும் புகை மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கொசு மாதிரிகளை மாநில சுகாதாரத் துறை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது. அப்பகுதியில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அப்பகுதி கர்ப்பிணிகளின் உடல்நிலையை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம். ஜிகா வைரஸ், பொதுவாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும், கர்ப்பிணி ஒருவர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால், அது வயிற்றில் உள்ள குழந்தையின் தலையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய மைக்ரோசெபாலி என்ற அரிய நரம்பியல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும். டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால் இந்நோய் பரவுகிறது. உடலுறவு, ரத்த பரிமாற்றம் மூலமாக மற்றவர்களுக்கு பரவும். தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிடமிருந்து அவளது கருவுக்கு பரவும் அபாயம் உள்ளது. இந்நோய் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், அரிப்பு, மூட்டு வலி போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்படும். இந்த வைரஸ் முதன் முதலில் உகாண்டாவில் 1947-ம் ஆண்டு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்