வடகிழக்கில் ரூ. 1,34,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்: நிதி மந்திரி
வடகிழக்கு பகுதிகளில் ரூ. 1,34,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுமென நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி,
வடகிழக்கு பகுதிகளில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலை மற்றும் விமான இணைப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.
மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர், இப்பகுதி முழுவதும் பல உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் மத்திய அரசு பெரும் பணத்தை செலவு செய்து வருகிறது என்றார்.
"வடகிழக்கு முழுவதும் பரவியுள்ள 2,011 கி.மீ.க்கு ரூ. 74,000 கோடி மதிப்பிலான 20 ரயில்வே திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்று திருமதி சீதாராமன் கூறினார்.
இப்பகுதியில் மொத்தம் ரூ. 58,000 கோடி செலவில் 4,000 கிமீ சாலைகளை அரசாங்கம் மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். "வடகிழக்கில் சுமார் ரூ. 2,200 கோடி செலவில் 15 விமான இணைப்பு திட்டங்கள் நடந்து வருகின்றன," என்று நிதி மந்திரி கூறினார்.
எனினும், இந்த திட்டங்களின் எப்போது நிறைவும் செய்யப்படும் என்ற தகவலை அவர் குறிப்பிடவில்லை.