பக்ரீத் பண்டிகையையொட்டி பொதுஇடங்களில் கால்நடைகளை பலியிட தடை- கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பொதுஇடங்களில் கால்நடைகளை பலியிட தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு: கர்நாடகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பொதுஇடங்களில் கால்நடைகளை பலியிட தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கால்நடைகளை பலி கொடுக்க...
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, பக்ரீத் பண்டிக்கைகாக சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள், சாலைகள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கால்நடைகளை பொது இடங்களில் பலி கொடுக்க கடந்த 2020-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், பக்ரீத் பண்டிகையின் போது, இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பக்ரீத் பண்டிகைக்கு கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு எந்த விதமான தடையும் இல்லை.
விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
ஆனால் மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், கூட்டு பிரார்த்தனையின் போது அரசின் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகம் எந்த பகுதியில் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் அனுமதி அளிக்கிறதோ, அங்கு மட்டுமே கூட்டு பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.
அத்துடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக போலீஸ் துறை, கால்நடை துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடும் உத்தரவுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுவதும் கட்டாயமாகும். மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.