சிவமொக்கா சிறையில் டி.வி.க்கள், கேமராக்களை அடித்து நொறுக்கிய கைதி
மங்களூரு விமான நிலைய வெடி குண்டு வழக்கில் தண்டனை பெற்ற, கைதி சிவமொக்கா சிறையில் டி.வி.கள், கேமராக்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவமொக்கா:-
டி.விகள், கேமராக்கள் சேதம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் விமான நிலையத்திற்கு வெடி குண்டு வைத்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா ராவ் என்ற என்ஜினியர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
முதலில் மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சாட்சிகளை அழிக்க கூடும் என்று கூறி, சிவமொக்கா சிறைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சிவமொக்காவில் சிறையில் தண்டனை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தன் மீது வேறு ஏதேனும் வழக்கு இருக்கிறதா என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த ஆதித்யா ராவ், அவர்களிடம் இருந்து தப்பித்து காணொலி காட்சி அறைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது கையில் கல் எடுத்து வந்திருந்தார். அந்த கல் கொண்டு அங்கிருந்து டி.வி.கள் மற்றும் கேமராக்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதை பார்த்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆதித்யாராவை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து தண்டனை கைதிகளுக்கான அறையில் அடைத்தனர். ஆதித்யாராவின் இந்த செயல்பட்டால் சிறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீஸ் சூப்பிரண்டு அனிதா வந்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் ஆதித்யாராவ் தாக்கியதில் 2 டி.வி.கள், ஒரு கேமராக்கள் முற்றிலும் நொறுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அனிதா துங்காநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆதித்யா ராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.