மன்மோகன் சிங் முன்னுதாரணமாக திகழ்கிறார்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம்

மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிவடைய உள்ள எம்.பிக்களுக்கு பிரியா விடை அளித்து பிரதமர் மோடி பேசினார்.

Update: 2024-02-08 06:30 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனல் பறக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் எம்.பிக்களுக்கு பிரியாவிடை அளித்து பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசும் போது, எம்.பி பதவி  முடிவடைய உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டி பேசினார். பிரதமர் மோடி கூறியதாவது; "மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்கள் இந்த நாட்டின் சொத்து. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆறு முறை இந்த அவையை அலங்கரித்துள்ளார். கொரோனா காலத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு உறுதுணையாக நின்றனர்.

அனைத்து எம்.பிக்களுக்கும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்கிறார். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்க வீல் சேரில் வந்து தனது கடமையை மன்மோகன் சிங் ஆற்றினார். ஓய்வு பெற இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்