அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்- சுப்ரீம் கோர்ட்டு

இந்த மனு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க கோரி நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்

Update: 2022-08-25 09:27 GMT

புதுடெல்லி,

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து 200-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த ஜூலை 27-ந் தேதி தீர்ப்பு அளித்தனர்.

அதில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. சொத்துக்களை முடக்கும் சட்டப்பிரிவும் சட்டரீதியாக செல்லும். குற்றங்களின் தீவிரத்தன்மையை கருதியே, சொத்துக்களை முடக்குவது, பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்வது போன்ற கடுமையான சட்டப்பிரிவுகள் இந்த சட்டத்தில் உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் வழக்கின் நகல் அறிக்கையை குற்றம்சாட்டப்படும் நபர்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நபர் கைது செய்யப்படும்போது மட்டுமே அறிக்கையின் நகலை அளித்தால் போதும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டதாக தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு கடந்த 22-ந்தேதி அறிவித்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும் போது, அமலாக்க துறையின் வழக்கு தகவல் அறிக்கையை குற்றம் சாட்டப்படும் நபருக்கு வழங்குவது உள்பட முதன்மையாக இரண்டு சிக்கல்களுக்கு மறு பரிசீலனை தேவை. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையின் இரண்டு அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும். வழக்கு தகவல் அறிக்கையை வழங்கப்படாமல் இருப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மறு ஆய்வு செய்யும். ஒருவர் குற்றமற்றவராக இருக்கலாம் என்ற அனுமானத்தை நிராகரிக்க அதிகாரம் உள்ளது என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். மேலும் இந்த மனு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க கோரி நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்

Tags:    

மேலும் செய்திகள்