'அரசியலுக்கு வர தைரியம் இல்லாதவர்களின் அரசியல் விளையாட்டு' - பிபிசி ஆவணப்படம் குறித்து ஜெய்சங்கர் 'பளிச்' பதில்
பிரதமர் மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
டெல்லி,
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, நரேந்திரமோடி தற்போது இந்தியாவின் பிரதமராக உள்ள நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் டெல்லி வன்முறை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.
பிபிசி ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாக இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த மாதம் 21-ம் தேதி தடை விதித்தது.
மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும், தடையை மீறி இந்த ஆவணப்படம் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ஆய்வு நடத்தியது. பிபிசி ஆவணப்படம், அதற்கான தடை, அதனை தொடர்ந்து பிபிசி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு சம்பவங்களில் இந்தியா அரசு மீது சில அமைப்புகள் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ஏஎன்ஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்தார். அப்போது பிபிசி ஆவணப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில் பின்வருமாறு,
பிபிசி ஆவணப்படம் வெளியேன நேரம் எதிர்பாராமல் நடந்தது என்று நம்புகிறீர்களா?. இந்தியாவில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டதாக எனக்கு தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது.
அரசியல் களத்திற்கு வர தைரியமில்லாதவர்களால் விளையாடப்படும் அரசியல் இது. இதை கொண்டாடுபவர்கள் யார் என்று பாருங்கள். இந்தியா, இந்திய அரசு, பாஜக, பிரதமர் மீது தீவிரவாத தன்மை கொண்ட பார்வையை வடிவமைக்கும் வேலை சிறிது சிறிதாக நடைபெறுகிறது. இது 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது' என்றார்.