பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவர் பற்றி துப்பு கிடைத்தது
பெங்களூருவில் கைதான 5 பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த மற்றொரு பயங்கரவாதி பற்றி துப்பு கிடைத்துள்ளது. அவர் துபாயில் பதுங்கி இருப்பது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் கைதான 5 பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த மற்றொரு பயங்கரவாதி பற்றி துப்பு கிடைத்துள்ளது. அவர் துபாயில் பதுங்கி இருப்பது அம்பலமாகி உள்ளது.
5 பயங்கரவாதிகள் கைது
பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே சுல்தான் பாளையாவில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை கடந்த 19-ந் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், 4 வாக்கி-டாக்கிகள், வெடிப்பொருட்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. கைதான 5 பயங்கரவாதிகளையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதானவர்களில் ஜாகித் தப்ரேஜ் கொடுத்த தகவலின்பேரில், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டு இருந்தது. கைதான 5 பேருக்கும் ஆயுதங்கள் சப்ளை செய்தவர்கள் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள்.
துப்பு கிடைத்தது
இந்த நிலையில், கைதான 5 பேருக்கும் துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை சப்ளை செய்தது சல்மான் என்பவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை பற்றிய துப்பு போலீசாருக்கு கிடைத்துள்ளது. இவர், தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதி ஜுனைத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவர் கூறியபடி தற்போது கைதாகி இருக்கும் 5 பேருக்கும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சப்ளை செய்திருந்தார். அதாவது ரெயில் மூலமாக அந்த துப்பாக்கி, குண்டுகளை கடத்தி வந்த சல்மான், டி.பேகூரு அருகே கைதான 5 பேரிடமும் ஒப்படைத்து இருந்தார். அதன்பிறகு, நேபாள எல்லை வழியாக வெளிநாட்டுக்கு தப்பி சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தற்போது பயங்கரவாதி சல்மான் துபாயில் பதுங்கி இருப்பதும், ஜுனைத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.
40 வங்கி கணக்குகள் பரிசீலனை
அதே நேரத்தில் கைதான 5 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளையும் போலீசார் பரிசீலனை நடத்தினார்கள். அதாவது பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வந்திருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கைதான 5 பேர், அவர்களது குடும்பத்தினர் உள்பட 40 வங்கி கணக்குகளை போலீசார் பரிசீலனை நடத்தி உள்ளனர்.
அந்த 40 வங்கி கணக்குகளின் பணபரிமாற்றங்கள், எங்கிருந்து எல்லாம் பணம் வந்துள்ளது, பெரிய அளவில் பணம் எதுவும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா? உள்ளிட்ட தகவல்களையும் போலீசார் சேகரித்துள்ளனர். கைதான 5 பயங்கரவாதிகளிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜுனைத்தை போன்று தலைமறைவாக இருக்கும் சல்மானை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.