சத்தீஸ்கர் வளர்ச்சியில் பாஜகவுக்கு முக்கிய பங்கு - பிரதமர் மோடி

சத்தீஸ்கரை கொள்ளையடித்து நாசமாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-07-07 10:12 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என 2 நாள் பயணமாக உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது அவர் 4 மாநிலங்களிலும் ரூ.50,000 கோடி மதிப்பிலான சுமார் 50 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சத்தீஸ்கரில் ரூ 3,750 கோடி சாலை திட்டம் உட்பட ரூ.7,500 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராய்பூரில் உள்ள விஜய் சங்கல்ப் மஹாரலியில் நடந்த பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சத்தீஸ்கர் வளர்ச்சியில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. மாநில மக்களின் தேவைகளை பாஜக அறிந்துள்ளது. இன்றும், 7,000 கோடி ரூபாய்க்கு மேல் திட்டப்பணிகள் துவக்கப்பட்டு, இந்த இடத்தின் வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில், பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரில் உள்ள ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களுக்கு சாலைகள் போடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 3,500 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், சுமார் 3000 கி.மீ., திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கரை கொள்ளையடித்து நாசமாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்றார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை 6 பசுமைச்சாலை அமைகிறது. சத்தீஸ்கர் - ஆந்திராவை இணைக்கும் இந்த 6 வழி பசுமைச்சாலை திட்டத்தின் மதிப்பீடு ரூ.3,750 கோடியாகும்.

சத்தீஸ்கரின் உதாந்தி வனச்சரணாலயம் வழியாக 2.8 கி. மீ தூரம் வரை ஆறு வழி சாலை கட்டப்படுகிறது.விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 2.8. கி.மீ தூரம் வரை 27 இடங்களில் சுரங்கப்பாதை அமைகிறது. 6 வழிச்சாலையை கடக்க குரங்குகளுக்கு 17 இடங்களில் மரத்திலான சிறிய வகை பாலம் அமைக்கப்படுகிறது. சத்தீஸ்கரில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்