ஜி20 மாநாடு: 15-க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் இருதரப்பு ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி
சர்வதேச தலைவர்களுடன் பிரதமர் மோடி 15-க்கும் மேற்பட்ட இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்த நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச தலைவர்களுடன் பிரதமர் மோடி 15-க்கும் மேற்பட்ட இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி செப்டம்பர் 8-ந்தேதி(இன்று) மொரீசியஸ், வங்காளதேசம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையடுத்து செப்டம்பர் 9-ந்தேதி(நாளை) இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து செப்டம்பர் 10-ந்தேதி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் விருந்து மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தவிர கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்த உள்ளார். மேலும் கமோரோஸ், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, பிரேசில், நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.