உலகில் அனைத்து தலைவர்களாலும் அதிகம் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி: இத்தாலி பிரதமர் புகழாரம்
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை டெல்லியில் பிரதமர் மோடி இன்று வரவேற்று, சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கு முதன்முறையாக இன்று வருகை தந்து உள்ளார். அவரை டெல்லி ராஷ்டிரபதி பவனில் முறைப்படி பிரதமர் மோடி வரவேற்றார்.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான நீண்டகால உறவை இன்னும் வலுப்படுத்தும் மற்றும் ஆழப்படுத்தும் வகையில் பிரதமர் மெலோனியின் இந்த பயணம் அமையும் என தெரிவித்து உள்ளது.
புதுடெல்லியில் நடைபெறும் வருடாந்திர ரெய்சினா பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி பலதரப்பு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். அதற்கு முன், டெல்லி வந்த இத்தாலி பிரதமர் மெலோனி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், எரிசக்தி, சுகாதாரம், தூதரக மற்றும் கலாசார விவகாரங்கள் பற்றி விரிவான செயல்திட்டங்களை பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சந்திப்பில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேசும்போது, உலகம் முழுவதும் அனைத்து தலைவர்களாலும் அதிகம் விரும்பப்படுபவர்களில் பிரதமர் மோடியிம் ஒருவர்.
அவர் ஒரு பெரிய தலைவராக இருக்கிறார் என உண்மையில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த பிரதமர் தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமரானார்.