நேபாள புதிய பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நேபாள புதிய பிரதமரான கே.பி.சர்மா ஒலிக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்டு-மாவோயிஸ்டு கட்சி தலைவர் புஷ்பகமல் தாஹல் என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த கூட்டணியில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு-லெனினிஸ்டு கட்சியும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் இந்த இரு தலைவர்களுக்கு இடையே பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. தற்போது பட்ஜெட் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை திரும்ப பெற்றது.
இதனால் பெரும்பான்மையை இழந்த பிரதமர் பிரசந்தா, கடந்த 12-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பான்மை பெற முடியாமல் அவரது அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து புதிய அரசை அமைக்க கே.பி.சர்மா ஒலி நடவடிக்கை எடுத்தார். நாடாளுமன்றத்தின் மீதமுள்ள பதவிக்காலத்தில் 18 ஆண்டுகள் கே.பி.சர்மா ஒலியும், பிற பகுதியை நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேக் பகதூர் துபேயும் பிரதமராக பதவியேற்பது என அவர்களுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி புதிய அரசை அமைக்க ஜனாதிபதியிடம் கே.பி.சர்மா ஒலி உரிமை கோரினார். அத்துடன் தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலையும் அளித்தார். இதை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலியை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் நேற்று நியமித்தார். அவருக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேபாள புதிய பிரதமரான கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேபாள புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மாவுக்கு எனது வாழ்த்துகள். நமது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவின் ஆழமான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக நமது பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்க்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.