10 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றம் எப்படி உள்ளது..? நமோ செயலியில் மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி
நமோ செயலியின் கணக்கெடுப்பில் மத்திய அளவிலான வளர்ச்சி மற்றும் தொகுதிகள் தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மத்திய பா.ஜனதா அரசின் மற்றும் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து மக்களின் கருத்துகள் மற்றும் பல்வேறு விவகாரங்களில் மக்களின் மனநிலை பற்றி அறிய பிரதமர் நரேந்திர மோடியின் நமோ என்ற செயலி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேற்று மக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? நமோ ஆப் இல் உள்ள 'ஜன் மேன் சர்வே' மூலம் உங்கள் கருத்தை நேரடியாக என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று கூறி, சர்வேயில் பங்கேற்பதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பில் மத்திய அளவிலான வளர்ச்சி மற்றும் தொகுதிகள் தொடர்பான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.