நீதிபதிகளின் பணி, தீர்ப்பு விவரங்களை கவனித்து வருகின்றனர் மக்கள்: மத்திய சட்ட மந்திரி பேச்சு

நீதிபதிகளின் பணி மற்றும் தீர்ப்பு விவரங்களை மக்கள் கவனித்து வருகின்றனர் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

Update: 2023-01-24 06:28 GMT


புதுடெல்லி,


டெல்லியில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு பேசினார்.

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் இடையே கடுமையான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், கொலீஜிய நடைமுறைக்கு ரிஜிஜூ விமர்சனங்களை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஒவ்வொரு குடிமகனும் அரசை நோக்கி கேள்வி கேட்கிறார். கேள்விகள் கேட்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசிடம் மக்கள் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், பின்னர், யாரிடம் சென்று அவர்கள் கேட்பார்கள்.

அதனால், நாம் அவற்றில் இருந்து விலகி சென்று விடாமல், அவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என கூறினார்.

தொடர்ந்து அவர், நீதிபதிகள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. அவர்கள் மக்களின் கண்காணிப்புக்கு உட்படுவதில்லை. நீதிபதிகளை மக்கள் மாற்ற முடியாது என்றபோதிலும், நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பு விவரங்கள், நீதி வழங்குதல் மற்றும் அவர்களின் நடத்தை விவரங்களை மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர் என ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.

இது சமூக ஊடகங்களின் காலம். அதனால், யாரும் ஒளிந்து கொள்ள முடியாது. நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள், என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் மற்றும் உங்களது தீர்ப்புகளை மக்கள் கவனித்து அதற்கேற்ப தங்களது கருத்துகளை உருவாக்கி கொள்கின்றனர் என ரிஜிஜூ கூறியுள்ளார்.

எனினும், நீதிபதிகள் பற்றி விமர்சிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தன்னிடம் கேட்டு கொண்டார் என்றும் மத்திய மந்திரி ரிஜிஜூ கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்