சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுமதி மறுப்பு: பவன் கல்யாண் சாலையில் படுத்து திடீர் போராட்டம்..!!

பவன் கல்யாண் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-09 18:52 GMT

அனுமஞ்சிப்பள்ளி,

ஆந்திர முதல்-மந்திரியாக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று காலை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனிடையே சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சந்திரபாபு நாயுடுக்கு ஜனசேனா கட்சி துணை நிற்கும். அவரது கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பது காவல்துறையின் பொறுப்பு" என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்திக்க சென்ற ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக பவன் கல்யாண் பயணித்த விமானம் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டது. பவன் கல்யாண் விஜயவாடா சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று காவல்துறை அளித்த கடிதத்தை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து ஐதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக செல்ல முயன்றபோதும் பவன் கல்யாணை ஆந்திர காவல்துறை தடுத்து நிறுத்தியது. அனுமஞ்சிப்பள்ளியில் பவன் கல்யாணின் வாகனங்கள் மீண்டும் நிறுத்தப்பட்டன. ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் மங்களகிரிக்கு நடந்து செல்ல முடிவு செய்தார், மேலும் ஒரு முறை அவரை காவல்துறை தடுத்தனர்.

இந்நிலையில் ஆந்திர காவல்துறை நடவடிக்கையால் ஆவேசமடைந்த பவன் கல்யாண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்படுத்தியது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தங்களுடன் ஒத்துழைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் பவன் கல்யாணிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து பவன் கல்யாணை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்