எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநிலங்களவையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றம் மத்திய மந்திரிக்கு எதிராக உரிமை பிரச்சினை

எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநிலங்களவையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு எதிராக உரிமை பிரச்சினை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

Update: 2023-08-08 21:45 GMT

புதுடெல்லி,

மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், மணிப்பூர் பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டார்.

சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டார். அவரை இருக்கைக்கு செல்லுமாறு சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். அவருடன் டெரிக் ஓ பிரையன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேஜையை தட்டினார்.

அவருக்கு ஆட்சேபனை தெரிவித்த ஜெகதீப் தன்கர், அவரை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ய தீர்மானம் தாக்கல் செய்யுமாறு மத்திய மந்திரி பியூஷ் கோயலை கேட்டுக்கொண்டார்.

பியூஷ் கோயலும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவர் சபையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார். சபையை பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார்.

சபைக்குவர அனுமதி

பகல் 12 மணிக்கு சபை கூடியபோது, டெரிக் ஓ பிரையனின் நடத்தை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை ஜெகதீப் தன்கர் கேட்டார். கருணை காட்டுமாறு சில உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

பின்னர், டெரிக் ஓ பிரையனை இடைநீக்கம் ெசய்யும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாததால், அவர் தொடர்ந்து சபைக்கு வரலாம் என்று ஜெகதீப் தன்கர் அறிவித்தார். அதனால், அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

பிறகு, மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசுகையில், சீன நிறுவனங்களிடம் இருந்து 'நியூஸ்கிளிக்' இணையதளம் நிதி பெற்று வருவதாக குற்றம் சாட்டினார். சீனாவின் பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பதாகவும், ராகுல்காந்திக்கும், சீனாவுக்கும் என்ன தொடர்பு? என்றும் அவர் கேட்டார். அதற்கு எதிர்ப்பு எழுந்தநிலையில், பகல் 12.45 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

வெளிநடப்பு

பகல் 12.45 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, பியூஷ் கோயலுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். அதனால் ஏற்பட்ட அமளியால் பிற்பகல் 2 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு சபை கூடியபோது, மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாலும், பியூஷ் கோயல் மன்னிப்பு கேட்க மறுத்ததாலும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

அந்த சமயத்தில், இன்டர்-சர்வீசஸ் அமைப்புகள் மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா, மக்களவையில் கடந்த 4-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.

மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்த ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், ''எத்தகைய போரையும் சந்திக்க இந்தியா முற்றிலும் தயாராக உள்ளது. கடல்சார் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. தேவைப்பட்டால், ராணுவ பட்ஜெட் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 அல்லது 6 சதவீதத்துக்கு உயர்த்த தயாராக இருக்கிறோம்'' என்று கூறினார்.

ஐ.ஐ.எம். மசோதா

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா, கடந்த 4-ந் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களின் (ஐ.ஐ.எம்.) நிர்வாக பொறுப்புடைமையை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க இம்மசோதா வழி வகுக்கிறது. அந்நிறுவனங்களின் செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்வார்.

தேசிய நர்சிங் மற்றும் பேறுகால பராமரிப்பு ஆணைய மசோதா, தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதா ஆகியவையும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள், கடந்த 28-ந் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மருத்துவ துறையில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இம்மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

உரிமை பிரச்சினை

முன்னதாக, பகல் 1 மணியளவில், அவை முன்னவரும், மத்திய மந்திரியுமான பியூஷ் கோயலுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் குழு தலைவர்கள், சபைத்தலைவர் ஜெகதீப் தன்கரிடம் உரிமை பிரச்சினை நோட்டீஸ் அளித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர்களை 'துரோகிகள்' என்று கூறியதற்காக அவருக்கு எதிராக உரிமை பிரச்சினை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதுபற்றி சபையில் குறிப்பிட்ட பியூஷ் கோயல், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக இருந்தால், அவற்றை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்