சீன எல்லைப்பிரச்சினை குறித்து விவாதிக்க மறுப்பு - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி, வெளிநடப்பு

சீனாவுடனான எல்லைப்பிரச்சினை குறித்து விவாதிக்க மறுத்ததால் நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Update: 2022-12-19 07:57 GMT

புதுடெல்லி,

அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்சி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ம் தேதி இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முற்பட்டன. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் சீன படையுடன் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மோதலின்போது இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன படைகளை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடைந்தனர்.

இதனிடையே, இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயன்ற சம்பவம், இந்திய-சீன படைகளின் மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அந்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் அவை நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியதுமே சீனாவுடனான எல்லைப்பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அந்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கையை புறக்கணித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபை நடவடிக்கை 2 மணி வரை ஒத்து வைக்கப்பட்டுள்ளது. அவை மீண்டும் கூடும்போதும் இதே பிரச்சினை எழும் என்பதால் இன்றும் அவை நடவடிக்கைகள் தடை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்