ராகுல்காந்தி மன்னிப்பு கேட்டால்தான் நாடாளுமன்ற முடக்கம் தீரும் மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி பேட்டி
ராகுல்காந்தி மன்னிப்பு கேட்டால்தான் நாடாளுமன்ற முடக்கம் முடிவடையும் என்று மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.;
புதுடெல்லி,
ராகுல்காந்தி மன்னிப்பு கேட்டால்தான் நாடாளுமன்ற முடக்கம் முடிவடையும் என்று மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்தில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியாவை இழிவுபடுத்தியதற்காக, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அமளியில் ஈடுபட்டு வருகிறது. அதானி பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.
இந்தநிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய குடிமகன் யாராவது வெளிநாட்டுக்கு சென்றால், அங்கு பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அந்த பேச்சு சுதந்திரத்துடன், பொறுப்புணர்வும் இருப்பது அவசியம்.
இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, மிகவும் பழமையான நாடு. அதில் சந்தேகம் இல்லை.
ராகுல்காந்தி வெளிநாட்டுக்கு சென்றால், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பேசுகிறார். அவர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அவர் இந்தியாவில் இருப்பதைத்தான் கூறுவதாக சொல்வதை ஏற்க முடியாது. அவர் ஏதேனும் செயல்திட்டத்துக்கு உடந்தையாக இருக்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், ராகுல்காந்தி சந்தேகத்துக்கு இடமின்றி மன்னிப்பு கேட்டால்தான் பிரச்சினை முடிவுக்கு வரும்
ஆகவே, நாடாளுமன்ற முடக்கம் தீர அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் எடுக்கும் முடிவை பொறுத்து இருக்கிறது.
ராகுல்காந்தி, தெளிவாக மன்னிப்பு கேட்க வேண்டும். ''தவறு செய்து விட்டேன். அதனால் மன்னிப்பு கேட்கிறேன்'' என்று அவர் கூற வேண்டும். அப்படி செய்தால், நாடாளுமன்றம் செயல்பட வழி பிறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.