ஜனாதிபதி உரையுடன் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்
ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்குவதையொட்டி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.
பிரதமர் ஆலோசனை
பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி பிரதமர் மோடி நேற்று மத்திய மந்திரிகள் கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள், மத்திய அரசின் கொள்கை முயற்சிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி உரை
இரு அவைகளின் கூட்டு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவு பதி முர்மு உரை ஆற்றுகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி ஜனாதிபதி பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை
முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த அறிக்கை 2022-23 முழு நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும், நிதி வளர்ச்சி, பண மேலாண்மை மற்றும் வெளித்துறைகள் உள்ளிட்ட எதிர்கால கண்ணோட்டத்தையும் மதிப்பாய்வு செய்கிறது.
மேலும், இந்த பொருளாதார ஆய்வறிக்கை, முக்கிய கொள்கை முடிவுகளுக்கு முன்னோடியாக அமைவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் விரிவான புள்ளிவிவர தரவு மூலம் முந்தைய முடிவுகளின் தாக்கத்தையும் மதிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
நாளை மறுதினம் (1-ந் தேதி) காலை 11 மணிக்கு மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தொடர்ந்து தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் இது.
அவரது பட்ஜெட் உரை நேரடியாக மக்களவை டி.வி.யில் (லோக்சபா டி.வி.) ஒளிபரப்பாகிறது. பின்னர் மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் வைக்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைய உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது.
கவர்ச்சி அம்சங்கள் எதிர்பார்ப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களை கவருகிற வகையில் இந்த பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய வரி விதிப்புகள் இருக்காது, மாதச்சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வில் சலுகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குறிப்பாக வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2½ லட்சமாக இருப்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடுவாரா என்பது நாளை மறுதினம் தெரிந்துவிடும்.
மேலும் வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சியின் படி விலக்கு சலுகை என்பது பல வருடங்களாக தொடர்ந்து ரூ.1½ லட்சமாகவே உள்ளது. இது ரூ.2 லட்சமாக உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் புதிய வேலை வாய்ப்புகள், முதலீடு சார்ந்த வளர்ச்சியை மையமாக கொண்டு இந்த பட்ஜெட் அமையும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பட்ஜெட் தொடரின் முதல் இரு நாட்களில் மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி கேள்வி நேரமும், பூஜ்ய நேரமும் இடம் பெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 2-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இரு சபைகளிலும் நடக்கிற விவாதத்தின் முடிவில், பிரதமர் மோடி பதில் அளித்து பேசுவார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி முடிவுக்கு வருகிறது.
இரண்டாவது அமர்வு, மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும்.
அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி மத்திய அரசு இன்று (30-ந் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துகிறது.
இந்தக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் இந்த கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும்.
பிற்பகலில் பா.ஜ.க. கூட்டணிக்கட்சி தலைவர்கள் கூட்டமும் நடக்கிறது. இதில் இரு அவைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய உத்தி பற்றி விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.