நாடாளுமன்ற தாக்குதல்: கைதான 6 பேரில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 5 பேர் ஒப்புதல்
உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி டெல்லி காவல்துறை சார்பில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.;
புதுடெல்லி,
கடந்த டிசம்பர் 13-ந்தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவர் மஞ்சள் வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வாதிகாரிகளை அனுமதிக்க முடியாது என்று அந்த நபர்கள் கோஷங்களையும் எழுப்பினர். இதேபோன்று நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்பட 2 பேர் வண்ண புகையை வெளிப்படுத்தும் கேன்களை பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவான தினத்தில் இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம் ஆசாத், லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் 'பாலிகிராப்' எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி கோர்ட்டில் டெல்லி காவல்துறை மனுத்தாக்கல் செய்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆசாத் என்பவரை தவிர மற்ற 5 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். முன்னதாக இவர்கள் 6 பேரின் போலீஸ் காவலை மேலும் 8 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.