7 மாதங்களில் முதல் முறை 8 ஆயிரத்தை நெருங்கியது, கொரோனா

இந்தியாவில் 7 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு அதிரடியாக உயர்ந்து 8 ஆயிரத்தை நெருங்கியது.;

Update:2023-04-13 02:05 IST

புதுடெல்லி,

நாட்டில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்குள் அடங்கி வந்தது. ஆனால் நேற்று அது அதிரடி காட்டி 8 ஆயிரத்தை நெருங்கியது. 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 830 பேருக்கு பாதித்தது. இது 7 மாதங்களுக்குப் பிறகு (சரியாக 223 நாட்கள்) முதல் முறையாக அதிகபட்ச பாதிப்பு ஆகும்.

இதனால் இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நாடெங்கும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு தினசரி பாதிப்பு விகிதம் 3.65 சதவீதமாக பதிவானது.

நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து கேரளாவில் அதிகமாக உள்ளது. நேற்றும் அங்கு 1,886 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. அதற்கு அடுத்தாற்போல் டெல்லியில் 980 பேருக்கும், மராட்டியத்தில் 919 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

நாட்டில் நேற்று ஒரு நாளில் 4 ஆயிரத்து 692 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 4 ஆயிரத்து 771 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் தொற்றால் 21 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை 16 ஆக குறைந்தது. கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 5-ஐ கணக்கில் காட்டினர்.

அதே நேரத்தில் டெல்லி, இமாசலபிரதேசம், பஞ்சாபில் தலா 2 பேரும், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மராட்டியம், அரியானா, குஜராத்தில் தலா ஒருவரும் தொற்றில் இருந்து மீள முடியாமல் நேற்று இறந்தனர். இதனால் நாட்டில் தொற்றுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 16 ஆக உயர்ந்தது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 3 ஆயிரத்து 122 கூடியது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 40 ஆயிரத்து 215 பேர் தொற்று மீட்பு சிகிச்சையில் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்