ஆபரேசன் காவிரி; ஜெட்டாவில் இருந்து 231 பயணிகள் மும்பை வருகை: மத்திய வெளியுறவு அமைச்சகம்

ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ் ஜெட்டா நகரில் இருந்து 231 பயணிகளுடன் மீட்பு விமானம் ஒன்று மும்பைக்கு புறப்பட்டு உள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Update: 2023-05-03 02:44 GMT

புதுடெல்லி,

சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் திடீரென நடந்த சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்து உள்ளது. இதனால், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகின்றன.

சூடானில் 4 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் தங்களை மீட்கும்படி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, உயர்மட்ட அளவிலான அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் விமானங்கள், கப்பல்களை அனுப்ப அரசு முடிவு செய்தது.

அந்த வகையில், ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ், இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், ஐ.என்.எஸ். சுமேதா உள்ளிட்ட 2 கடற்படை கப்பல்களும் மீட்பு பணிக்காக சென்று உள்ளன. இந்த மீட்பு பணியில் இண்டிகோ விமான நிறுவனமும் இணைந்து உள்ளது.

சூடான் துறைமுகத்திற்கு வரும் இந்தியர்களை கப்பல் மற்றும் விமானம் வழியே சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு அழைத்து வந்து அதன்பின், விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றனர். இதன்படி, பகுதி பகுதியாக இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, ஜெட்டாவில் இருந்து 231 பயணிகளுடன் விமானம் ஒன்று மும்பைக்கு புறப்பட்டு உள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி டுவிட்டரில் இன்று தெரிவித்து உள்ளார். சூடான் துறைமுகத்தில் இருந்து இந்திய விமான படையை சேர்ந்த சி-130ஜே விமானத்தில் 116 பயணிகள் ஜெட்டா நகருக்கு நேற்று புறப்பட்டு உள்ளனர். இதனை அரிந்தம் பக்சி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதே நிலையில், 328 பயணிகள் புதுடெல்லிக்கு வந்தடைந்து உள்ளனர். இதுவரை 3 ஆயிரம் பேர் வரை இந்தியாவுக்கு திரும்பி உள்ளனர் என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். மற்றொரு 231 இந்தியர்களுடன் விமானம் ஒன்று, ஜெட்டாவில் இருந்து குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு வந்தடைந்தது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், தெற்கு சூடானின் வெளியுறவு அமைச்சகம் ஜூபா நகரில் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மோதலில் ஈடுபட்டு உள்ள இரு தரப்பினரும் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதன்படி மே 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான 7 நாட்கள் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இதனால், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் உள்ள தொய்வு நீங்கும். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்