நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படுமே நாட்டின் ஹீரோக்கள் சொல்வது அல்ல- ராகுல் காந்தி விமர்சனம்
'புதிய இந்தியாவில்' நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.
மேலும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் அக்னிபத் திட்டத்தை விமர்சித்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங், "நாட்டைக் காப்பாற்றுங்கள், அக்னிபத் திட்டம் நம்மை மோசமாக பாதிக்கும், இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் செல்கிறது. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "ஒரு பக்கம் நாட்டின் பரம்வீரும், மறுபக்கம் பிரதமரின் பெருமையும் சர்வாதிகாரமும் உள்ளது. புதிய இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படுமே தவிர, நாட்டின் ஹீரோக்கள் சொல்வது அல்ல" என்று இந்தியில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.