'எதிர்க்கட்சியினரை பயங்கரவாதிகளுடன் பிரதமர் ஒப்பிடுவதா?' - அமித்ஷாவுக்கு பதில் கடிதத்தில் கார்கே பாய்ச்சல்

எதிர்க்கட்சியினரை பயங்கரவாதிகளுடன் பிரதமர் ஒப்பிடுவது சரியா என்று உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-07-26 22:48 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கு மத்திய உள்துறை மந்திரி கடிதம் எழுதினார்.

அதில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக உள்ளது. கட்சி வேறுபாடு தாண்டி அனைவரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு...

அதைத் தொடர்ந்து அமித்ஷாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

ஒரே நாளில், பிரதமர் எதிர்க்கட்சிகளை ஆங்கிலேய ஆட்சியாளர்களுடனும், பயங்கரவாதிகளுடனும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். உள்துறை மந்திரியாகிய நீங்கள் எதிர்க்கட்சியினருக்கு உணர்வுப்பூர்வமான கடிதம் எழுதி, ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்க்கிறீர்கள். ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்து வருகிறது. தற்போது அந்த இடைவெளி, ஆளுங்கட்சிக்கு உள்ளேயே தோன்றத் தொடங்கியுள்ளது.

துரதிர்ஷ்டவசமானது

எதிர்க்கட்சிகள் திக்கற்றுச் செயல்படுகின்றன என்று பிரதமர் கூறியிருப்பது அபத்தமானது மட்டுமல்ல, துரதிர்ஷ்டவசமானதும் கூட.

நீங்கள் உங்கள் கடிதத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் தொடர்பான வார்த்தைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. நாங்கள் வலியுறுத்துகிறபடி நாடாளுமன்றத்துக்கு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதை பிரதமர் மோடி தனது கவுரவத்துக்கு இழுக்காக கருதுகிறார்.

வாய்ப்பளிக்க வேண்டும்

கடிதத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிது. ஆனால் உங்களின் நடத்தையின் மூலம் மட்டுமே அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

அவை அலுவல்கள் சீராக நடைபெற அரசு விரும்பினால், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளை எழுப்ப வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்