இந்திய தூதரகத்தை அச்சுறுத்தும் காலிஸ்தான் ஆதரவாளர்களை நாடு கடத்துங்கள்; இங்கிலாந்து அதிகாரியிடம் அஜித் தோவல் வலியுறுத்தல்

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் காலிஸ்தான் ஆதரவாளர்களை நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் அஜித் தோவல் வலியுறுத்தினார்.

Update: 2023-07-07 21:33 GMT

தூதரகம் மீது தாக்குதல்

இந்தியாவில் சீக்கியர்களுக்கு 'காலிஸ்தான்' என்ற தனிநாடு கோரி ஒரு பிரிவினர் குரல் கொடுத்து வருகிறார்கள். வெளிநாடுகளில் அவர்கள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது 2-வது தடவையாக தாக்குதல் நடத்தினர். இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களையும், தூதரக அதிகாரிகளையும் அச்சுறுத்தும் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே அந்தந்த நாடுகளிடம் இப்பிரச்சினையை இந்தியா எழுப்பி இருக்கிறது.

இந்தியா வருகை

இந்நிலையில், இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர் டிம் பாரோ, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் நேற்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார். இருவரும் தனியாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பிரதிநிதிகள் குழுவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய தூதரக அதிகாரிகளுக்கான அச்சுறுத்தல் பிரச்சினையை அஜித் தோவல் எழுப்பினார்.

நாடு கடத்த வேண்டும்

தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் கிளர்ச்சியாளர்களை நாடு கடத்துதல் போன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதத்தையும், அதற்கு நிதியுதவி செய்வதையும் எதிர்த்து ஒன்று சேர்ந்து போராட இருவரும் ஒப்புக்கொண்டனர். முக்கியமான தொழில்நுட்பங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது என்றும் முடிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்