டெல்லியில் மழையால் காற்று மாசு குறைந்தது; வாகன கட்டுப்பாடு ஒத்திவைப்பு
உலகளவில் அதிக மாசு கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முன்னிலையில் உள்ளது.;
புதுடெல்லி,
உலகளவில் அதிக மாசு கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முன்னிலையில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த மாசு அளவை விட டெல்லியில் அதன் அளவு 80 முதல் 100 மடங்கு அதிகரித்திருந்தது.
பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் விவசாயக் கழிவுகள் எரிப்பு காரணமாகவும் டெல்லியின் மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசை தொடர்ந்து ஒற்றை - இரட்டை என வாகனங்களின் பதிவெண் அடிப்படையில், அவற்றை அடுத்தடுத்த நாட்களில் அனுமதிக்கும் திட்டத்தை டெல்லி அரசு கையில் எடுத்தது.
தீபாவளி முடிந்ததும் நவ.13 முதல் நவ.20 வரை, இந்த வகையில் வாகனங்களை சாலைகளில் அனுமதிப்பது என முடிவு எட்டப்பட்டது. தனியார் வாகனங்களில் 4 சக்கர வாகனங்கள் மட்டுமே இந்த கட்டுப்பாட்டுக்குள் வரும். இதன் மூலம் நகரின் மாசு மற்றும் போக்குவரத்து நெருக்கடி, எரிபொருள் நுகர்வு உள்ளிட்டவை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக டெல்லியின் காற்று மாசு கணிசமாக தணிந்தது. இதனால் நவ.13-க்கு திட்டமிட்ட ஒற்றை - இரட்டை பதிவெண் கார்களுக்கான கட்டுப்பாடு ஒத்திவைக்கப்பட்டதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.