கிரகலட்சுமி திட்டத்திற்கு காலகெடு அறிவிக்கவில்லை

கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலகெடு விதிக்கப்படவில்லை என்று மாவட்ட கலெக்டர் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-07-29 18:45 GMT

மண்டியா:

கிரகலட்சுமி திட்டம்

கர்நாடக அரசு அறிவித்துள்ள உத்தரவாத திட்டங்களில் ஒன்று கிரகலட்சுமி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவி தொகையாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த உதவி தொகையை பெற குடும்ப தலைவிகள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பம் செய்யவேண்டும்.

அதாவது கர்நாடக ஓன், பெங்களூரு ஓன் ஆகிய மையங்களில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் உதவி தொகையை பெற விண்ணப்பம் செய்யும் நாள் முடிந்துவிட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் குமார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டையில் திருத்தம்

இதுகுறித்து நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட கலெக்டர் குமார் கூறியதாவது:-

கிரகலட்சுமி திட்டத்தை பெற ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கப்படவேண்டும். அதேபோல வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படவேண்டும். அதன்பின்னர்தான் கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். இதுவரை கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய காலகெடு விதிக்கவில்லை. எனவே பெண்கள் பொறுமையாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கிடையில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி ஆகியவற்றில் திருத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் 79 மையங்களில் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 32 தபால் நிலையங்கள், 19 வங்கிகள், 15 பி.எஸ்.என்.எல் அலுவலகம், 11 பொதுமக்கள் சேவை மையம், 2 ஏ.எஸ்.கே. மையம் என மொத்தம் 79 மையங்களில் ஆதார் அட்டை திருத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

காத்திருக்கவேண்டாம்

இங்கு பொதுமக்கள் காத்திருப்பதை தடுக்க டோக்கன் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த டோக்கன் நடைமுறையை மக்கள் கடைபிடித்தால் போதும், காத்திருக்கவேண்டிய அவசியம் இருக்காது. அதேநேரம் அனைத்து மையங்களிலும் சென்று ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய முடியாது.

அரசு அறிவித்துள்ள மையங்களில் மட்டுமே ஆதார் அட்டை திருத்தம் செய்ய முடியும். அதேபோல 78 கிராம ஒன் மையங்களில் ஆதார் அட்டை திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த மையங்களில் ஆதார் அட்டையில் என்ன என்ன திருத்தம் செய்யவேண்டுமோ, அதை செய்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்