காதல் திருமணம் செய்து 3 மாதமே ஆன நிலையில் குட்டையில் குதித்து புதுமண தம்பதி தற்கொலை

காதல் திருமணம் செய்து 3 மாதமே ஆன நிலையில் புதுமண தம்பதி குட்டையில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-08-01 00:15 IST

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி அருகே கெரேகோடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 26). இவர் தேவனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் எலெக்ட்ரானிக் கடையில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் ஜருகஹள்ளி கிராமத்தை சேர்ந்த சகானா (22) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையே அவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிஜ்ஜவாரா கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் பிஜ்ஜவாரா கிராமத்தின் புறநகர் பகுதியில் தோட்டம் ஒன்றில் இருந்த குட்டையில் ரமேசும், சகானாவும் பிணமாக மிதந்தனர். இதுகுறித்து அறிந்த தோட்ட உரிமையாளர் உடனடியாக விஜயாப்புரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் பண்ணை குட்டையில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விஜயாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்