நீட் தேர்வு - மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
'நீட்' தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத இருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.
வழக்கம் போல, இந்த ஆண்டும் 'நீட்' தேர்வு கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. எனவே தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
* நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
* ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் 2 நகல்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
* பிற்பகல் 1.30 மணிக்கு நீட் தேர்வு மைய நுழைவாயில் மூடப்படும். அதன்பின் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
* பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை அவசியம்.
* மாணவர்கள் செல்போன்களில் கொண்டு வரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
* வாட்ச், பெல்ட், ஷூ, கம்மல், மூக்குத்தி, தலை கிளிப் உள்ளிட்டவற்றை அணியக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.