சூரத்கல் அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி

சூரத்கல் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்து ரூ.2 கோடி அளவில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2022-09-27 19:00 GMT

மங்களூரு;


தனியார் நிதி நிறுவனம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல்லை அடுத்த இட்யா கிராமத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி மங்களூரு சைபர் கிரைம் போலீசில் நேற்று ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். என்னை கடந்த 2019-ம் ஆண்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த அசோக் பட், வித்யா, பிரியங்கா பட் ஆகியோர் சந்தித்தனர். அப்போது தங்கள் நிதி நிறுவனத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் 2 வருடங்கள் கழித்து வட்டியுடன் அந்த பணத்தை இருமடங்காக வழங்கப்படும் என்று கூறினர்.

ரூ.2 கோடி மோசடி

அதற்கு நான் ஒப்புக் கொண்டேன். அதன்பேரில் அவர்கள் கடந்த 2 வருடங்களாக தினமும் என்னிடம் இருந்து தலா ரூ.1,500 வசூலித்து வந்தனர். அதை ஒரு கணக்கு புத்தகத்தில் பதிந்தும் கொடுத்து வந்தனர். கடந்த ஆண்டு(2021) மார்ச் மாதம் 28-ந் தேதியுடன் நான் சேர்ந்த இருமடங்கு பணம் திட்டம் முடிவடைந்தது. அதையடுத்து நான் அவர்களிடம் எனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டேன்.

ஆனால் அவர்கள் இன்று(நேற்று) வரை ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பணத்தை திருப்பி தர மறுக்கிறார்கள். பின்னர் விசாரித்தபோது அவர்கள் இதுபோல் ஏராளமானோரிடம் இதுவரை ரூ.2 கோடி அளவில் பணம் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

3 பேர் மீது வழக்கு

அதனால் நிதி நிறுவன உரிமையாளர்களான அசோக் பட், வித்யா, பிரியங்கா பட் ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்