கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் தற்கொலை: மாயமான பெண், வனப்பகுதியில் பிணமாக மீட்பு - தூக்கிட்டு உயிரை மாய்த்தார்

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Update: 2023-03-07 14:59 GMT

சிக்கமகளூரு:

தற்கொலை

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோணிபீடு போலீஸ் எல்லைக்குட்பட்ட உக்கேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் ஆச்சார் (வயது 34). இவரது மனைவி நேத்ரா. இந்த நிலையில் நேத்ராவுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த தனஞ்ஜெயா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் ஜெகதீசுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் நேத்ரா கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெகதீஷ், கடந்த 3-ந்தேதி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

காபி தோட்டத்தில்...

இந்த நிலையில், ஜெகதீசின் சாவுக்கு நேத்ரா தான் காரணம் என்று அவரது தாய் யசோதம்மா கோணிபீடு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து கோணிபீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், போலீசுக்கு பயந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு நேத்ரா திடீரென்று மாயமானார். இதனால் அவரை போலீசாரும், உறவினர்களும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோணிபீடு அருகே உள்ள ஒரு காபி தோட்டத்தில் நேத்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காபி தோட்ட தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நேத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நேத்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சோகம்

இதுகுறித்து கோணிபீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்