மாயமானதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவர் படுகொலை

மாயமானதாக தேடப்பட்டு வந்த நிலையில், கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுரகியில் நடந்துள்ளது.;

Update:2023-06-22 02:51 IST

கலபுரகி:

மாயமானதாக தேடப்பட்டு வந்த நிலையில், கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுரகியில் நடந்துள்ளது.

கல்லூரி மாணவர்

கலபுரகி மாவட்டம் ஜீவரகி தாலுகா கமலாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 17). இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் டவுன் பகுதியில் உள்ள பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது நண்பர்கள் சிலருடன் கடந்த 18-ந் தேதி வெளியே சென்றார். அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அன்றைய நாள் இரவு வரை அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அந்த பகுதியில் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேலும் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நெலோகி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே புறநகர் பகுதியில் உள்ள பீமா ஆற்றுப்பகுதியில் வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பிணமாக மீட்பு

மேலும் உடலை மீட்டு விசாரித்தனர். அப்போது அது மாயமானதாக தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரது உடலை, போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. ஆனால் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். நண்பர்களுடன் வீட்டைவிட்டு வந்த வாலிபர், பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்