கணவன்-மாமியாரை உணவில் சயனைடு கலந்து கொலை செய்த பெண் காதலனுடன் கைது

சொத்துக்காக கணவன்-மாமியாருக்கு உணவில் மெல்ல கொல்லும் சயனைடு கலந்து கொலை செய்த பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டார்

Update: 2022-12-03 11:48 GMT

மும்பை:

மும்பையில் ஜவுளி தொழிலரை கொன்றதாக அவரது மனைவி , காதலனுடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சாண்டக்ரூஸ் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மும்பை சாண்டாக்ரூசை சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் கமல்காந்த் (49) இவரது மனைவி காஜல் (44). இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் தலையிட்டு சண்டையை தீர்க்க முயன்றனர் முடியவில்லை. இந்த நிலையில் இறுதியாக, 2021 இல், காஜல் சாண்டாக்ரூஸில் உள்ள தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது மகளுடன் தனியாக வாழத் தொடங்கினார்.

மே 2022 இல், காஜல் மீண்டும் சில நிபந்தனைகளுடன் திரும்பி வர ஒப்புக்கொண்டார். ஜூன் 2022 முதல் கணவ்ன் மனைவியும் ஒன்றாக வாழத் தொடங்கினர்.

அப்போது சமையல் செய்வதில் காஜல் கூடுதல் ஆர்வம் காட்டினார். இந்த நிலையில் ஜூலை 2022 இல், கமல்காந்தின் தாயார் சரளாதேவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்தார், ஆனால் அவரது மரணத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி கமல்காந்துக்கும் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.இறுதியாக தெற்கு மும்பையில் உள்ள ஒரு மருத்துமனைக்கு மாற்றப்படார்.

அங்கு அவருக்கு பல்வேறு இரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது இரத்த பரிசோதனையில் ரத்தத்தில் ஹெவி மெட்டல் இருப்பது தெரிய வந்தது. அவரது ரத்தத்தில் ஆர்சனிக் மற்றும் தாலியம் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.

17 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பல உறுப்புகள் செயலிழந்து நிலையில் கமல்காந்த் செப்டம்பர் 20ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த மரணம் குறித்து குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். அவரது மனைவி காஜல் எந்த வருத்தத்தையும் உணரவில்லை, உண்மையில் அவர் தனது கணவரின் ஜவுளி நிறுவனத்தில் இருந்து இயந்திரங்களை விற்பனை செய்வதிலும், இன்சூரன்ஸ் பாலிசி குறித்த புதுப்பிப்புகளைப் பெறுவதிலும் பிசியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இறுதியாக, கமல்காந்த் சகோதரி மூலம் சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றப்பிரிவு பிரிவு விசாரணையின் போது காஜல் மற்றும் அவரது காதலர் ஹிதேஷ் ஜெயின் மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

"குற்றம் சாட்டப்பட்டவர் இறந்தவரின் உணவில் மெல்லக்கொல்லும் சயனைடுகளை கலந்து உள்ளார் . இது அவரது மரணத்திற்கு வழிவகுத்து உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் ஐபிசி பிரிவு 302 (கொலை), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் 120பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்லது. இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிசம்பர் 8ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்