சொத்து தகராறில் மூதாட்டியை மகனே கொன்ற பயங்கரம்

சொத்து தகராறில் மூதாட்டியை மகனே கொன்ற பயங்கரம் தேவனஹள்ளியில் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு அவரது மருமகளும் உடந்தையாக இருந்துள்ளார்.;

Update:2023-08-06 00:15 IST

தேவனஹள்ளி:

சொத்து தகராறில் மூதாட்டியை மகனே கொன்ற பயங்கரம் தேவனஹள்ளியில் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு அவரது மருமகளும் உடந்தையாக இருந்துள்ளார்.

சொத்துக்கள்

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியை சேர்ந்தவர் ராகவேந்திரா(வயது 40). இவரது மனைவி சுதா(38). ராகவேந்திராவின் தாய் சின்னம்மா(60). இவர் கூலி வேலை செய்து வந்தார். சின்னம்மாவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றை பங்கு பிரிப்பில் ராகவேந்திரா மற்றும் குடும்பத்தினர் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சின்னம்மாவுடன், ராகவேந்திரா மற்றும் அவரது மனைவி சொத்து குறித்து கேட்டு தகராறு செய்தனர்.

இதையடுத்து சின்னம்மா, விறகு சேகரிப்பதற்காக புறநகர் பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ராகவேந்திரா மற்றும் அவரது மனைவி பின்தொடர்ந்து சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, ராகவேந்திரா மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோர் சேர்ந்து சின்னம்மாவை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் சின்னம்மா படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அடித்து கொலை

இதுபற்றி தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் ராகவேந்திரா மற்றும் சுதா ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சொத்து பிரச்சினையில் ராகவேந்திரா மற்றும் சுதா ஆகியோர், சின்னம்மாவை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் பெற்ற தாயை, மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்