ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டவர் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மீட்பு!

இந்திய விமானப்படை, ராணுவ வீரர்கள் இமயமலைத் தொடரின் மேல் பகுதியில் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Update: 2022-08-27 13:11 GMT

புதுடெல்லி,

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டைச் சேர்ந்த அகோஸ் வெர்ம்ஸ் என்ற சுற்றுலா பயணி இந்தியாவில் தனியாக பல பகுதிகளுக்கும் வலம் வந்தார். இந்நிலையில், அவர் திடீரென காணாமல் போனார்.

ஹங்கேரியை சேர்ந்த மலையேற்ற வீரரான அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் மலையேற்றம் செய்யும்போது வழி தவறி, சும்சாம் பள்ளத்தாக்கில் உள்ள உமாசிலா கணவாய் பகுதியில் காணாமல் போனார் என்பது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து, காணாமல் போன ஹங்கேரி நாட்டவரை மீட்கும் பணியில் ராணுவமும், விமானப்படையும் இறங்கியது.

உதம்பூரைச் சேர்ந்த இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் டூலில் நிறுத்தப்பட்ட ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவினர் இமயமலைத் தொடரின் மேல் பகுதியில் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் 30 மணி நேர தேடுதலுக்கு பிறகு, வெர்ம்ஸ் பத்திரமாக மீட்கப்பட்டார். பின், அவர் கிஷ்த்வாருக்குக் கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவருக்கு ராணுவ மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. கிஷ்த்வாரின் துணை ஆணையர் ஹங்கேரிய தூதரகத்திற்கு வெர்ம்ஸின் உடல்நிலை குறித்து காணொலி மூலம் தெரிவித்தார்.

இதனை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்திர ஆனந்த் தெரிவித்தார்.

இந்நிலையில், தன்னை மீட்ட இந்திய ராணுவத்திற்கு வெர்ம்ஸ் நன்றி தெரிவித்தார். "நான் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தேன்... என்னைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற இந்திய இராணுவத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று அவர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்