பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி - அதிர்ச்சி சம்பவம்
பள்ளி கழிவறையில் பெற்றெடுத்த குழந்தையை அந்த சிறுமி ஆள்நடமாட்டமற்ற திறந்தவெளியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பிண்டி மாவட்டத்தில் ஆள்நடமாட்டமற்ற திறந்தவெளி பகுதியில் நேற்று காலை பச்சிளம் குழந்தை கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் குழந்தையை பெற்றொடுத்துவிட்டு அதை ஆள்நடமாட்டமற்ற பாலைவன பகுதியில் வீசிச்சென்றது 15 வயது சிறுமி என்று கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அந்த சிறுமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட கழிவறையில் வைத்து குழந்தை பெற்றெடுத்து, குழந்தையை ஆள்நடமாட்டமற்ற பாலைவன பகுதியில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது. சிறுமி தனது பாட்டியின் கிராமத்திற்கு கடந்த ஓராண்டாக அவ்வப்போது சென்று வந்துள்ளார்.
பாட்டியின் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாட்டி கிராமத்திற்கு செல்லும்போதெல்லாம் அந்த இளைஞன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி கழிவறையில் அந்த சிறுமி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து யாருக்கும் தெரியக்கூடாது என்று எண்ணிய அந்த சிறுமி, பச்சிளம் குழந்தையை ஆள்நடமாட்டமற்ற பாலைவன பகுதியில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய 21 வயது இளைஞனை கைது செய்ய போலீசார் அந்த கிராமத்திற்கு சென்றனர். ஆனால், போலீசார் வருவதற்குள் அந்த இளைஞன் தப்பியோடிவிட்டான். தலைமறைவாக உள்ள இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமி பெற்றெடுத்த குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.