10 நாளில் எம்.பி.ஏ. படிப்பு...? யு.ஜி.சி. எச்சரிக்கை

யு.ஜி.சி. ஒழுங்குமுறைகளின்படி, எந்தவொரு ஆன்லைன் படிப்பையும் வழங்குவதற்கு, யு.ஜி.சி.யிடம் இருந்து உயர்கல்வி மையங்கள் ஒப்புதல் பெற வேண்டிய தேவை உள்ளது.

Update: 2024-04-23 15:14 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஆன்லைன் வழியே கல்வி பயில்வது மாணவ மாணவிகளிடையே அதிகரித்து உள்ளது. இதில் சில நன்மைகளும் உள்ளன. எனினும், போலியான பெயரில் ஆன்லைன் படிப்புகள் வெளியிடப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) எச்சரித்து உள்ளது.

இதுபற்றி யு.ஜி.சி.யின் செயலாளர் மணீஷ் ஜோஷி கூறும்போது, சில தனிநபர்கள் அல்லது அமைப்புகள் ஆன்லைன் வழி படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்களை வழங்குகின்றனர்.

அவை, உயர் கல்வி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை போன்ற வடிவில் வழங்கப்படுகின்றன. இதுபோன்று 10 நாட்களில் எம்.பி.ஏ. என்ற பெயரிலான பாடத்திட்டம் பற்றி எங்களுடைய குழுவின் கவனத்திற்கு வந்தது.

ஒரு பட்டப்படிப்பின் பெயர், அதன் கால அளவு மற்றும் படிப்பில் சேருவதற்கான தகுதி ஆகியவற்றை யு.ஜி.சி. அமைப்பே குறிப்பிடுகிறது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதல் முன்பே பெறப்படும். அதுபற்றி அதிகாரப்பூர்வ முறையில் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு பட்டப்படிப்பை, மத்திய சட்டத்தின் கீழ், தற்காலிக சட்டம் அல்லது மாநில சட்டம் ஆகியவற்றின்படி நிறுவப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகம் அல்லது நாடாளுமன்ற சட்டத்தினால் சிறப்பான அதிகாரம் பெற்ற கல்வி மையம் ஆகியவையே வழங்க கூடிய உரிமையை பெற்றுள்ளது.

யு.ஜி.சி. ஒழுங்குமுறைகளின்படி, எந்தவொரு ஆன்லைன் படிப்பையும் வழங்குவதற்கு, யு.ஜி.சி.யிடம் இருந்து உயர்கல்வி மையங்கள் ஒப்புதல் பெற வேண்டிய தேவை உள்ளது.

ஆன்லைன் பாடத்திட்டங்களை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆன்லைன் பாடத்திட்டங்களை வழங்க கூடிய அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி மையங்கள் அடங்கிய பட்டியல் deb.ugc.ac.in என்ற வலைதளத்தில் உள்ளது.

அதனால், எந்தவொரு ஆன்லைன் பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன் அல்லது சேரும் முன் அதன் செல்லுபடியாகும் தன்மை பற்றி உறுதி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்